வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

இரவில் சிக்கன் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டியவர்கள் யார்? மருத்துவர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இரவில் சிக்கன் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டியவர்கள் யார்? மருத்துவர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

சிக்கன் உணவுகள் உலகம் முழுவதும் பிரபலமானவை என்றாலும், இந்தியாவில் கோழி இறைச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிக்கன் குழம்பு, சிக்கன் ஃப்ரை, பிரியாணி, சிக்கன் 65, லாலிபாப், கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் எனப் பல்வேறு வகைகளில் கோழி இறைச்சி சமைக்கப்பட்டு விரும்பி சாப்பிடப்படுகிறது. இருப்பினும், இரவு நேரத்தில் சிக்கன் சாப்பிடுவது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற கருத்து பலரிடமும் காணப்படுகிறது. உண்மையில் இரவில் சிக்கன் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது.

 

பொதுவாக இரவு நேரத்திலும் சிக்கன் சாப்பிடலாம். ஆனால் அதன் தயாரிப்பு முறை, சாப்பிடும் அளவு மற்றும் உணவு எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். அதிக எண்ணெயில் பொரித்த சிக்கனைத் தவிர்த்து, கிரில் செய்தது, ஆவியில் வேகவைத்தது அல்லது குறைந்த எண்ணெயில் சமைத்த சிக்கனைத் தேர்வு செய்வது சிறந்தது. அதிக காரம், மசாலா மற்றும் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள் சிலருக்கு செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

 

மேலும், இரவு உணவை முடித்துவிட்டு உடனடியாகப் படுக்கைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவு 8 மணிக்குள் உணவை எடுத்துக்கொண்டு, தூங்குவதற்கு குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் இடைவெளி விடுவது நல்லது. சிக்கனுடன் கீரைகள், வெண்டைக்காய், இதர காய்கறிகள் மற்றும் கோதுமை ரொட்டி போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடும்போது ஊட்டச்சத்துகள் நிறைந்த சமச்சீரான உணவாக அமையும்.

 

ஏற்கனவே அஜீரணம், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை மற்றும் பிற செரிமானப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் இரவு நேரத்தில் அதிக அளவு சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இரவில் சிக்கன் சாப்பிட விரும்பாதவர்கள் மீன், தயிர், பருப்பு வகைகள் போன்ற மாற்று உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

 

எனவே, இரவில் சிக்கன் சாப்பிடக்கூடாது என்பது பொதுவான விதி அல்ல. சரியான அளவு, குறைந்த எண்ணெய் மற்றும் எளிதில் செரிமானமாகும் வகையில் தயாரிக்கப்பட்ட சிக்கனைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதே முக்கியம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.