நள்ளிரவில் உணவு சாப்பிடும் பழக்கம் ஆபத்தா? கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து ஆய்வில் எச்சரிக்கை!

சமீப ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் இரவு நேரத்தில் தாமதமாக உணவு சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் ஐடி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் பலரும் இரவு 10 மணிக்கு மேல்தான் இரவு உணவை எடுத்துக்கொள்கின்றனர். வேலைப்பளு, மாறுபட்ட பணி நேரம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
இதற்கிடையில், நள்ளிரவு நேரங்களிலும் உணவகங்களுக்குச் சென்று பிரியாணி சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. இரவு 12 மணி, அதிகாலை 1 மணி, 2 மணி எனத் தாமதமான நேரங்களிலும் பலர் உணவு சாப்பிடுகின்றனர். ஆனால் இவ்வாறு உடலின் இயல்பான ஓய்வு நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் கவனம் ஈர்த்துள்ளன.
அமெரிக்காவின் Oregon Health and Science பல்கலைக்கழக ஆய்வை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவலின்படி, நள்ளிரவில் உணவு சாப்பிடுவதற்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயத்திற்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், நள்ளிரவில் உணவு உட்கொள்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் 20 முதல் 30 சதவீதம் வரை இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக இரவு உணவை அதிக நேரம் தாமதிக்காமல் சாப்பிடுவது உடலின் இயல்பான உயிரியல் கடிகாரத்திற்கு உதவக்கூடும். மேலும், இரவு உணவுக்கும் தூங்கும் நேரத்திற்கும் இடையே குறைந்தது இரண்டு மணி நேர இடைவெளி விடுவது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எனவே, வேலை காரணமாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ நள்ளிரவில் உணவு சாப்பிடுவதைத் தொடர்ந்து மேற்கொள்வதைத் தவிர்த்து, முடிந்தவரை சரியான நேரத்தில் இரவு உணவை எடுத்துக்கொள்வதுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் பின்பற்றுவது அவசியம்.




கருத்துகள் (0)