23 ஆண்டுகள் சிறைவாசம்… நிரபராதி என விடுவிக்கப்பட்ட இளைஞர்! ‘நடமாடும் பிணமாகிவிட்டேன்’ என வேதனையுடன் கூறிய நிசார்-உத்தீன்!

கர்நாடக மாநிலம் குல்பர்காவைச் சேர்ந்த 19 வயது மருந்தியல் மாணவர் நிசார்-உத்தீன் அகமது, கடந்த 1994-ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. ஹைதராபாத் காவல்துறையினர் அவரது வீட்டின் அருகிலேயே ரகசியமாக அவரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படாததால், சுமார் ஆறு வாரங்களாக மகன் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்துள்ளனர்.
1993-ஆம் ஆண்டு டிசம்பரில் கோட்டா, ஹைதராபாத், சூரத், கான்பூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்ற ரயில் குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் நிசாருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. காவல்துறையினரின் விசாரணையின்போது பெறப்பட்டதாகக் கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலமே அவருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்பட்டது.
அப்போது நடைமுறையில் இருந்த தடா (TADA) சட்டத்தின்படி, காவல்துறையிடம் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் நிசார்-உத்தீனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மகன் நிரபராதி என்றும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நம்பிய அவரது தந்தை நூர்-உத்தீன் அகமது, தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடத்தினார். இருப்பினும், மகனின் விடுதலையைக் காணாமலேயே 2006-ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தின் முடிவில், 2016-ஆம் ஆண்டு மே 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் நிசார்-உத்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
அப்போது 43 வயதை எட்டியிருந்த நிசார், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சிறையிலிருந்து வெளியே வந்தார். இளமைக் காலத்தின் பெரும்பகுதியைச் சிறைக்குள் கழித்துவிட்டு, சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்தினரிடம் திரும்பிய அவர், தனது வேதனையை வெளிப்படுத்தும் வகையில், "23 ஆண்டுகளுக்குப் பிறகு நான் சுதந்திரமாக இருக்கிறேன். ஆனால், இப்போது நீங்கள் பார்ப்பது ஒரு நடமாடும் பிணத்தைத்தான்" என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
வாழ்க்கையின் மிக முக்கியமான இளமைப் பருவத்தைச் சிறையில் கழித்த ஒரு மனிதரின் இந்த வார்த்தைகள், நீண்டகால சட்டப் போராட்டங்கள் மற்றும் தவறான தண்டனைகளால் ஒரு தனிமனிதருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளை நினைவூட்டுகின்றன.




கருத்துகள் (0)