கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் – காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த மனைவி! பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தனது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்குத் தெரிந்ததால், காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவரைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பெட்டதாசனபுரா மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்த உபேந்திரா (41) என்பவரின் மனைவி அனிதா (36) இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அனிதாவுக்கு வேறொரு நபருடன் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணவர் உபேந்திராவுக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தனது உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவரைக் கொலை செய்ய அனிதா திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது காதலனுடன் இணைந்து உபேந்திராவைத் தாக்கிய அனிதா, அவரது மூக்கையும் வாயையும் பலமாகப் பொத்தி, காதலனின் உதவியுடன் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெங்களூரு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, அனிதா மற்றும் அவரது காதலன் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண்ணே, காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக எழுந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)