கணவரைக் கொன்று உடலை நீல நிற டிரம்மில் மறைத்த கொடூரம்! முஸ்கான், சாஹிலுக்கு மரண தண்டனை விதித்த மீரட் நீதிமன்றம்!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் கணவரைக் கொலை செய்து, அவரது உடலைத் துண்டுகளாக்கி நீல நிற டிரம்மில் மறைத்து வைத்த வழக்கில் முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹில் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து மீரட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கில், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு மாவட்ட நீதிபதி அரவிந்த் குமார் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கணவரைக் கொலை செய்ததுடன், அவரது உடல் பாகங்களை நீல நிற டிரம்மில் அடைத்து மறைத்து வைத்ததாக முஸ்கான் மற்றும் சாஹில் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இருவருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கப்பட்டபோது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஸ்கான் மற்றும் சாஹில் ஆகியோர் காணொளிக் காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற நடவடிக்கைகளின்போது இருவரும் அமைதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்பட்ட நீல நிற டிரம், கத்தி மற்றும் மருந்துகள் தொடர்பாக அவற்றை விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட மொத்தம் 22 சாட்சிகளிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பு மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.




கருத்துகள் (0)