செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
ஆன்மிகம்

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றம்!

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' முழக்கமிட்டு பக்திப் பரவசத்துடன் அண்ணாமலையாரை தரிசித்தனர்.

 

இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகா தீபம் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் 1,000 மீட்டர் காடா துணி மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

 

இதையடுத்து, தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை மற்றும் துணிகள் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதை காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

மகா தீப தரிசனத்திற்காக 8,500 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால் கோயில் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 15,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

மேலும், தீபத் திருவிழாவையொட்டி 3,000 பக்தர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு 1,500 சீட்டுகளும், பிற மாவட்ட பக்தர்களுக்கு 1,500 சீட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இணையவழி அனுமதிச் சீட்டு பெறுவதற்கான இணைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.