வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மகன் கொலை! காதலருடன் சேர்ந்து 24 வயது மகனைத் தீர்த்துக்கட்டிய தாய் – 6 பேர் கைது!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மகன் கொலை! காதலருடன் சேர்ந்து 24 வயது மகனைத் தீர்த்துக்கட்டிய தாய் – 6 பேர் கைது!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், தனது 24 வயது மகனைக் கொலை செய்த வழக்கில் 44 வயதான தாய் மற்றும் அவரது காதலர் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த மீனா நாராயணன் என்பவர், ராகேஷ் ஜமுனி என்ற நபருடன் காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உறவுக்கு அவரது மகன் விஜய் நாராயணன் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், மகனை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதற்காக கர்நாடக ராஜ்யோத்சவா விழாவைக் காண்பிப்பதாகக் கூறி, கடந்த நவம்பர் 1ஆம் தேதி விஜய்யை பெலகாவிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முன்கூட்டியே திட்டமிட்டபடி அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல் நெடுஞ்சாலையோரத்தில் இருந்த கால்வாயில் வீசப்பட்டுள்ளது. இதற்கிடையில், நவம்பர் 3ஆம் தேதி கால்வாயில் கிடந்த விஜய்யின் சடலத்தை மாலமாருதி காவல்துறையினர் மீட்டனர்.

 

இதையடுத்து, கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதன் முடிவில், தாய் மீனா, அவரது காதலர் ராகேஷ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நான்கு பேர் என மொத்தம் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிறார் ஒருவரையும் காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.