மதுரை அருகே சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதி கோர விபத்து; 2 பேர் பலி, 3 பேர் படுகாயம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரி பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஐந்து பேர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தங்களது சொந்த ஊருக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நகரி பகுதியில் வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அவர்களது கார் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)