மின்வெட்டால் அரசு ஊழியர் சஸ்பெண்ட்; நடவடிக்கைக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மின்வாரியத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி வந்த அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மின்வெட்டுக்காக அரசு ஊழியர் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை தற்போது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மின்வெட்டு ஏற்பட்டதற்காக அரசு ஊழியரை மட்டும் பொறுப்பாக்கி பணியிடை நீக்கம் செய்வது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு ஊழியர்களைப் பலிகடா ஆக்குவது ஏற்கத்தக்கதல்ல என்றும், இந்த நடவடிக்கை அதிகார அத்துமீறலாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற இந்தச் சம்பவமும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட பணியிடை நீக்க நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.




கருத்துகள் (0)