பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளில் துறைத் தேர்வு கட்டாயம்.. புதிய உத்தரவு!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் தங்களுக்கான துறைத் தேர்வுகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் கட்டாயம் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தேவையான தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பணியாளர்களின் தகுதிகாண் பருவத்தை முடித்து, அவர்களைப் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், உரிய காலத்திற்குள் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களைப் பணியில் தொடர்ந்து அனுமதிப்பதற்கு நியமன அலுவலர்களுக்கு அதிகாரம் கிடையாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கான துறைத் தேர்வுகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் எழுதி தேர்ச்சி பெறுவது அவசியமாகியுள்ளது.




கருத்துகள் (0)