தவெக எம்.எல்.ஏக்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தும் விஜய்! 6 மாதப் பணிகள் குறித்து கேட்டறிந்ததாகத் தகவல்!

மாமல்லபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பின்போது, கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதிகளில் மேற்கொண்ட மக்கள் நலப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விரைவாகத் தீர்வு காணும் வகையில், மக்கள் தொடர்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், களத்தில் கூடுதல் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்றும் எம்.எல்.ஏக்களுக்கு விஜய் அறிவுறுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக முதலமைச்சரைச் சந்தித்து வரும் நிலையில், தங்களது சந்திப்பை முடித்துக்கொண்ட பெண் எம்.எல்.ஏக்கள் சிலர் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.




கருத்துகள் (0)