தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 17 பேர் சுட்டுக்கொலை!

தென் ஆப்பிரிக்காவில் 536 கிலோமீட்டர் தொலைவு இடைவெளியில் நடைபெற்ற இரண்டு தனித்தனி துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்தத் தாக்குதல் சம்பவங்கள் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
முதல் சம்பவம் பீட்டர்மரிட்ஸ்பர்க் நகருக்கு வெளியே நடைபெற்றுள்ளது. அங்கு காருக்குள் இருந்த 8 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல், மற்றொரு சம்பவம் பிரிட்டோரியா நகருக்கு அருகிலுள்ள குடிசைப் பகுதியில் நடந்துள்ளது. அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த காவல் ஆணையர் டாமி ம்தோம்பெனி, கடந்த ஆண்டு நடைபெற்ற கொலைச் சம்பவங்களுக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், துப்பாக்கிச்சூட்டுக்கான உண்மையான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)