தீபாவளி கொண்டாட்டத்தில் கரீனா கபூர் அணிந்த அரச குடும்ப நெக்லஸால் சர்ச்சை!

தீபாவளி கொண்டாட்டத்தின்போது பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் அணிந்திருந்த பழமையான அரச குடும்ப நகை தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த நெக்லஸில் 30 காரட் மரகதக் கல் பதிக்கப்பட்டிருந்ததுடன், குர்ஆனின் முக்கிய வசனம் ஒன்றும் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நகையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் வசனம் இடம்பெற்றிருப்பது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, காங்கிரஸ் நிர்வாகி அப்பாஸ் ஹபீஸ் நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த நகையுடன் வெளியிட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குவதுடன், பகிரங்கமாக மன்னிப்பும் கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுமார் இரண்டு நூற்றாண்டுகள் பழமையான இந்த அரச குடும்ப நெக்லஸ், நடிகர் சயீப் அலி கான் மூலம் கரீனா கபூருக்கு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டத்தில் அணிந்த ஒரே ஒரு நகை தற்போது மத உணர்வுகள் தொடர்பான விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)