செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண் கொலை; காதலன் உள்ளிட்ட இருவர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண் கொலை; காதலன் உள்ளிட்ட இருவர் கைது!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 28 வயது பெண், ஏற்பட்ட தகராறில் செங்கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காசியாபாத்தைச் சேர்ந்த பிங்கி என்ற அந்தப் பெண்ணுக்கு, சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் வழியாக பிந்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. பிந்து தனது நண்பர் ஆர்யனுடன் சேர்ந்து, பிங்கியின் வீட்டிற்கு அருகிலேயே அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும், பிங்கி அவ்வப்போது அங்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த நவம்பர் 9-ஆம் தேதி பிந்து மற்றும் ஆர்யனைச் சந்திக்கச் சென்ற பிங்கிக்கும் அவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இருவரும் செங்கல்லால் பிங்கியின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

பிங்கியின் உடலைக் கண்ட அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, இந்தக் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் பிந்து மற்றும் ஆர்யன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர். இரண்டு குழந்தைகளின் தாயான பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.