கொல்கத்தாவில் காதலியுடன் ஏற்பட்ட தகராறு: 25 வயது மென்பொருள் பொறியாளர் குத்திக்கொலை!

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான மென்பொருள் பொறியாளர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது காதலி மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவின் கரியா பகுதியில் உள்ள ஃபர்தாபாத்தில் அமைந்துள்ள வாடகை வீட்டில் சார்த்தக் சர்க்கார் (25) என்ற மென்பொருள் பொறியாளர் வசித்து வந்தார். அவருடன் காதலி சஞ்சலிகா மற்றும் அவரது தாயார் மவுமிதாவும் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு சார்த்தக் மற்றும் சஞ்சலிகா இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் தீவிரமடைந்த நிலையில், சஞ்சலிகா வீட்டில் இருந்த கத்தியால் சார்த்தக்கின் தோள்பட்டையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சார்த்தக்கின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்தக் காயங்களுடன் இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சஞ்சலிகாவைக் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் அவரது தாயார் மவுமிதாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)