வாட்ஸ்அப்பில் வரப்போகும் புதிய வசதி! எண்கள், தேதிகள், முகவரிகளை இனி ஒரே தொடுதலில் பயன்படுத்தலாம்!

வாட்ஸ்அப் பயனர்களின் அன்றாட பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் வகையில், உரையாடல்களில் பகிரப்படும் முக்கியத் தகவல்களைத் தானாகக் கண்டறிந்து அதற்கேற்ற செயல்களைப் பரிந்துரைக்கும் புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது. 'ஸ்மார்ட் டெக்ஸ்ட் ஆக்ஷன்ஸ்' என அழைக்கப்படும் இந்த வசதி, தொலைபேசி எண்கள், தேதிகள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் இருப்பிட முகவரிகளை எளிதாகப் பயன்படுத்த உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வந்தால், வாட்ஸ்அப் உரையாடல்களில் இடம்பெறும் தகவல்களை பயனர்கள் தனியாகத் தேட வேண்டிய அவசியம் குறையும். உதாரணமாக, ஒருவர் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்தால் அதைத் தொடர்புகளில் சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், உரையாடலில் குறிப்பிடப்படும் தேதியை நேரடியாக நாட்காட்டியில் சேர்க்கவும், பகிரப்பட்ட முகவரியை வரைபடத்தில் திறந்து பார்க்கவும் முடியும்.
மேலும், மின்னஞ்சல் முகவரிகளையும் அடையாளம் கண்டு அதற்கேற்ற செயல்களைப் பரிந்துரைக்கும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு தகவலைப் பார்த்துவிட்டு வேறு செயலிக்குச் சென்று மீண்டும் விவரங்களைத் தேடி உள்ளிட வேண்டிய சிரமம் குறையலாம்.
உரையாடலில் அடையாளம் காணப்படும் தகவல்களின் கீழே புள்ளிக்கோடு போன்ற குறியீடு தோன்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்தத் தகவலுக்கான கூடுதல் செயல்களைப் பயனர்கள் தேர்வு செய்ய முடியும். இந்த புதிய வசதி நடைமுறைக்கு வந்தால், வாட்ஸ்அப் உரையாடல்களில் பகிரப்படும் தகவல்களை நிர்வகிப்பது மேலும் சுலபமாகும்.




கருத்துகள் (0)