10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்.. அரசு அதிகாரி போக்சோவில் கைது!

சென்னை மதுரவாயல் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பிரம்மநாயகம் (55) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மநாயகம் தனது குடியிருப்பில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு படிக்க வந்த 10-ம் வகுப்பு மாணவியிடம் பல மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பிரம்மநாயகத்தை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)