ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
இந்தியா

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை பீகாரில் மனைவி காதலன் உட்பட 3 பேர் கைது!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை பீகாரில் மனைவி காதலன் உட்பட 3 பேர் கைது!

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த 32 வயதான முகமது இர்பான் இமாம், நவம்பர் 10ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

சம்பவத்தன்று இரவு சுமார் 11.30 மணியளவில், இர்பானின் மனைவி நேஹா பர்வீன் தனது இளைய மகனுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தார். மூத்த மகன் மட்டும் தந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வீட்டின் கதவைத் தட்டி இர்பானை வெளியே வரவழைத்துள்ளனர். அவர் வெளியே வந்ததும் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

 

துப்பாக்கிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, இர்பான் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது இர்பானின் மனைவி நேஹா பர்வீன் மற்றும் அவரது காதலன் கரண் குமார் ஆகியோர் அளித்த பதில்களில் முரண்பாடுகள் இருந்ததால், போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

 

இதையடுத்து இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து ஏவியதாக தெரியவந்துள்ளது. கொலை நடந்த 48 மணி நேரத்திற்குள் நேஹா பர்வீன், கரண் குமார் மற்றும் அவர்களுக்கு உதவிய சிறுவன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தலைமறைவான கூலிப்படையினரை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.