91 வயதிலும் தடகளத்தில் அசத்தும் தமிழக வீரர்! 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை!

ஈரோட்டில் நடைபெற்று வரும் மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில், 91 வயதிலும் உற்சாகத்துடன் பங்கேற்று வரும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ராஜேந்திரன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தனது 73 வயதில்தான் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய ராஜேந்திரன், வயது என்பது சாதனைக்குத் தடையல்ல என்பதை தனது தொடர் முயற்சிகளால் நிரூபித்து வருகிறார்.
இதுவரை ஆசிய அளவிலான போட்டிகளில் 24 பதக்கங்கள் உட்பட மொத்தம் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெறும் இந்த மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில், தமிழகத்தின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 1,600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
இளம் வயதிலேயே விளையாட்டுப் பயிற்சியைத் தொடங்கினால்தான் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், 73 வயதில் ஓட்டப்பந்தயத்தில் களமிறங்கி 91 வயதிலும் சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் ராஜேந்திரன்.
வயது வெறும் எண் மட்டுமே; விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.




கருத்துகள் (0)