ஆண்களுக்கும் வருகிறது புதிய கருத்தடை மாத்திரை! உடலுறவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் எடுத்தால் போதும் – விஞ்ஞானிகள் முயற்சி!

கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவதில் பெண்களுக்கே அதிக பொறுப்பும் சுமையும் இருந்து வருகிறது. பெண்களுக்கான பல்வேறு கருத்தடை சாதனங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், ஆண்களுக்கான கருத்தடை முறைகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது. ஆண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை போன்ற வழிமுறைகள் இருந்தாலும், அவற்றைப் பற்றிய போதிய புரிதல் இல்லாததால் பலரும் அவற்றைத் தேர்வு செய்யத் தயங்குகின்றனர். அதேபோல், கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஆணுறைகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தாலும், சிலர் அதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்தச் சூழலில், ஆண்களுக்கென புதிய கருத்தடை மாத்திரையை உருவாக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத்திரையை உடலுறவுக்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்டால், விந்தணுக்களின் செயல்பாட்டைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவு சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும் என்றும், அதன்பிறகு விந்தணுக்களின் இயல்பான செயல்பாடு மீண்டும் திரும்பும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆண்களுக்கான கருத்தடை முறைகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த முயற்சி, எதிர்காலத்தில் குடும்பக் கட்டுப்பாட்டில் ஆண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த மாத்திரை இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருப்பதால், அதன் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் பயன்பாட்டுக்கு அனுமதி கிடைப்பது தொடர்பான ஆய்வுகள் முடிவடைந்த பின்னரே நடைமுறை பயன்பாட்டுக்கு வருவது குறித்து தெளிவு கிடைக்கும்.




கருத்துகள் (0)