அரசுத் துறைகளுக்கு புதிய வாகனக் கொள்முதல் விதிமுறை! இனி மின்சார கார்களுக்கு மட்டுமே முன்னுரிமை!

மத்திய அரசு தனது துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பயன்படுத்தப்படும் பழைய வாகனங்களை மாற்றுவது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, இனி பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்களை வாங்கும்போது மின்சார கார்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய செலவினத் துறை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புதிய நடைமுறையின்படி, மின்சார வாகனங்களை வாங்குவதற்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும், பிற வகை வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கு ரூ.10 லட்சம் வரையிலும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களின் வாகனப் பயன்பாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை ஏதேனும் அரசு துறை பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதற்கான தேவையையும் உரிய காரணங்களையும் விளக்கி மத்திய செலவினத் துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் எனவும் புதிய வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைமுறை அரசு வாகனக் கொள்முதலில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.




கருத்துகள் (0)