வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு பெருமை! விருது வென்ற தேனி அல்லிநகரம்!

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு பெருமை! விருது வென்ற தேனி அல்லிநகரம்!

 

 

2025–2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில், நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தேனி மாவட்டத்தின் அல்லிநகரம் சிறந்த நகருக்கான விருதைப் பெற்று கவனம் ஈர்த்துள்ளது.

 

கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தூய்மையான நகரங்களுக்கான மதிப்பீடு, தற்போது 10-வது ஆண்டை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 73 நகரங்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்தியா முழுவதும் 4,751 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.

 

திடக்கழிவு மேலாண்மை, நகரின் வெளிப்படையான தூய்மை, கழிவுநீர் மேலாண்மை, தூய்மைப் பணியாளர்களின் நலன், பொதுமக்களின் பங்களிப்பு உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் நகரங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. நகரங்களின் மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு வெவ்வேறு பிரிவுகளாக விருதுகள் வழங்கப்படுகின்றன.

 

ஸ்வச் பாரத் மிஷன் விருதுகள்

 

மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒட்டுமொத்தத் தூய்மை மதிப்பீட்டுடன், தூய்மையான நதிக்கரை நகரம், தூய்மையான கடற்கரை நகரம், தூய்மையான இமயமலை நகரம், மாநிலத்தின் முதன்மைத் தூய்மை நகரம் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

 

இந்தூரை பின்னுக்குத் தள்ளிய நவி மும்பை

 

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான பிரிவில் மகாராஷ்டிராவின் நவி மும்பை முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் இந்த முறை அந்த இடத்தை இழந்துள்ளது. குஜராத்தின் சூரத் இரண்டாவது இடத்தையும், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

 

இதே பிரிவில் விசாகப்பட்டினம், ஜபல்பூர், லக்னோ ஆகிய நகரங்களும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

 

பல்வேறு மக்கள் தொகைப் பிரிவுகளில் வென்ற நகரங்கள்

 

3 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினி முதலிடத்தைப் பெற்றுள்ளது. சண்டிகர் இரண்டாவது இடத்தையும், ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

 

50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான பிரிவில் மத்தியப் பிரதேசத்தின் திவாஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளது. டெல்லியின் என்டிஎம்சி இரண்டாவது இடத்தையும், மத்தியப் பிரதேசத்தின் சாகர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

 

20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான பிரிவில் மகாராஷ்டிராவின் விதா முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஒடிசாவின் அஸ்கா இரண்டாவது இடத்தையும், கோவாவின் பனாஜி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

 

தேனி அல்லிநகரத்திற்கு விருது!

 

தூய்மையான நதிக்கரை நகரங்கள் பிரிவில் மத்தியப் பிரதேசத்தின் ரேவா முதலிடத்தைப் பெற்றுள்ளது. சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி ஆகிய நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

 

தூய்மையான கடற்கரை நகரங்கள் பிரிவில் ஒடிசாவின் பூரி முதலிடத்தையும், கேரளாவின் ஆலப்புழை இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிராவின் ரத்னகிரி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

 

இந்நிலையில், தமிழகத்தின் சார்பில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அல்லிநகரம் சிறந்த நகருக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்த விருதை அல்லிநகரம் நகராட்சி ஆணையர் பார்கவி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

 

தேனி அல்லிநகரம் இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. நகரின் தூய்மையைப் பேணுவதில் நகராட்சி நிர்வாகம், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த விருது பார்க்கப்படுகிறது.

 

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.