வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஈரோட்டில் குடிபோதையில் தகராறு: தந்தையைத் தரையில் மோதிக் கொன்ற மகன் கைது!

ஈரோட்டில் குடிபோதையில் தகராறு: தந்தையைத் தரையில் மோதிக் கொன்ற மகன் கைது!

 

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறின்போது, பெற்ற தந்தையைத் தாக்கிக் கொலை செய்ததாக 37 வயது மகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு புதுமை காலனி, சென்டர் தியேட்டர் அருகே வசித்து வந்தவர் அப்துல் ரஹீம் (75). பூ வியாபாரம் செய்து வந்த இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மூன்றாவது மகனான சபிக் (37), இருசக்கர வாகனப் பட்டறையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த எட்டு மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்த அவர், தந்தையின் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

சபிக்கிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், தினமும் போதையில் வீட்டிற்கு வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சபிக், அப்துல் ரஹீமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த சபிக் தனது தந்தையின் தலையைப் பிடித்து நடுரோட்டிலும் வீட்டிற்குள்ளும் தரையில் பலமாக மோதித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்துல் ரஹீமை அப்பகுதி மக்கள் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார், தந்தையைத் தாக்கிக் கொன்றதாக சபிக்கைக் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.