காதலை ஏற்க மறுத்த இளம்பெண்.. மனமுடைந்து வங்கி ஊழியர் தற்கொலை! ஹைதராபாத்தில் சோக சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதல் நிராகரிக்கப்பட்டதால் தனியார் வங்கி ஊழியர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் (25), ஹைதராபாத் கொத்தபேட்டையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். தனியார் வங்கியில் பணியாற்றி வந்த இவருக்கும், வனஸ்தலிபுரத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மென்பொருள் நிறுவன ஊழியருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த நட்பு சிவக்குமாருக்கு காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிவக்குமார் தனது காதலை அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால், காதலை ஏற்க மறுத்த இளம்பெண், இருவரும் நண்பர்களாகவே தொடரலாம் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சிவக்குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மீண்டும் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியபோதும், அந்தப் பெண் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
சூழ்நிலை மோசமாவதைக் கவனித்த இளம்பெண், சிவக்குமாரின் நண்பருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். நண்பரின் அறிவுரைப்படி அவரை வீட்டிற்கு அனுப்புவதற்காக வாகன வசதியையும் ஏற்பாடு செய்துவிட்டு வெளியே காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நேரத்தில் வீட்டிற்குள் சென்ற சிவக்குமார் உயிரை மாய்த்துக் கொண்டார். அப்பகுதி மக்களின் உதவியுடன் அவரைப் பார்த்தபோது உயிரிழந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து வனஸ்தலிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் நிகழ்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது உரிய ஆலோசனையும் ஆதரவும் பெறுவதன் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.




கருத்துகள் (0)