காவல் நிலையத்திற்குள் உடலில் தீ வைத்தபடி நுழைந்த பெண்.. கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் ஒருவர் உடலில் தீ வைத்தபடி நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் லட்சாதிபதி மீது போலீசார் பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அந்தப் பெண், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உடலில் தீ வைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் இருந்த பெண்ணை மீட்டு உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தச் சம்பவத்திற்கு காரணமானதாகக் கூறப்படும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்திலேயே பெண் தீக்காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




கருத்துகள் (0)