ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தோரணம்பதி அருகே காரில் இருந்த பெண் மற்றும் உறவினர் வெட்டிக் கொலை இரட்டைக் கொலை வழக்கில் காதலன் கைது!

தோரணம்பதி அருகே காரில் இருந்த பெண் மற்றும் உறவினர் வெட்டிக் கொலை இரட்டைக் கொலை வழக்கில் காதலன் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி அருகே தனியார் வீட்டுமனை பகுதியில் காரில் இருந்த பெண் மற்றும் ஆண் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருந்த சஞ்சீவி காந்தி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கொலை செய்யப்பட்டவர்கள் மாலினி (31) மற்றும் ரஞ்சித் குமார் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாலினிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் சஞ்சீவி காந்தியுடன் தொடர்பில் இருந்ததாகவும், பின்னர் ரஞ்சித் குமாருடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சில நாட்களாக மாலினி தன்னுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததால் சஞ்சீவி காந்தி ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலினி ரஞ்சித் குமாருடன் காரில் செல்வதைப் பார்த்த அவர், இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். தோரணம்பதி அருகே கார் நின்றிருந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில், ரஞ்சித் குமாரை முதலில் அரிவாளால் வெட்டிய சஞ்சீவி காந்தி, தப்ப முயன்ற மாலினியையும் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த சஞ்சீவி காந்தியை கைது செய்து திருப்பத்தூருக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த கொலை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது ஆத்திரத்தில் நிகழ்ந்ததா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.