திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
உலகம்

13 ஆண்டுகளாக மனைவிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை முன்னாள் அரசியல்வாதி உள்ளிட்டோர் குற்றவாளிகள்!

13 ஆண்டுகளாக மனைவிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை முன்னாள் அரசியல்வாதி உள்ளிட்டோர் குற்றவாளிகள்!

இங்கிலாந்தில் முன்னாள் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தனது மனைவிக்கு போதை மருந்து கலந்த பானத்தை கொடுத்து, அவரை சுயநினைவின்றி ஆக்கி 13 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விண்டன் பகுதியைச் சேர்ந்த 50 வயதான பிலிப் யங் என்பவர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.

 

விசாரணையில், தனது மனைவி ஜோன் யங்கிற்கு மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை கொடுத்து, அவரை சுயநினைவற்ற நிலையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இணையம் மூலம் அறிமுகமான பல ஆண்களை வீட்டிற்கு வரவழைத்து, மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தச் செய்ததுடன், அந்தச் சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து ரசித்ததாகவும் அவர் விசாரணையின்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

 

2024ஆம் ஆண்டு காவல்துறை விசாரணையில், மனைவியை மற்ற ஆண்களுடன் பகிர்ந்து கொள்வது தொடர்பான தனது விருப்பத்தைப் பற்றி யங் தெரிவித்ததாகவும், அதற்கு மனைவி சம்மதம் இல்லை என்பதை தெரிந்திருந்தும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது மின்னணு சாதனங்களை ஆய்வு செய்த போலீசார், மனைவிக்கு எதிரான வன்கொடுமைகளை பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

 

இந்த வழக்கில் பிலிப் யங் ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். அவருடன் தொடர்புடைய நார்மன் மாக்சோனி, ரிச்சர்ட் வில்கின்ஸ், கோனர் சாண்டர்சன் டாய்ல், முகமது ஹசன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டீன் ஹாமில்டன் என்பவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். நீதிமன்றக் காவலில் உள்ள இவர்களுக்கு டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.