ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
இந்தியா

குடும்பத் தகராறு விபரீதம்: செங்கல்லால் தந்தையைத் தாக்கிய 20 வயது மகள் – குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!

குடும்பத் தகராறு விபரீதம்: செங்கல்லால் தந்தையைத் தாக்கிய 20 வயது மகள் – குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக, 20 வயது மகள் செங்கல்லால் தாக்கியதில் அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கோட் மாவட்டத்தின் தார் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமண்பாய் பாக்டா. ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர், வேலைக்குச் செல்லாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, மனைவி ஹன்சாபென் மற்றும் மகள்களுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை நடத்துவதற்காக ஹன்சாபென் மற்றும் அவரது மூன்று மகள்களும் கூலி வேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்த லட்சுமண்பாய்க்கும் அவரது 20 வயது மகள் பூமிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது முற்றி கைகலப்பாக மாறியபோது, ஆத்திரமடைந்த பூமிகா அருகிலிருந்த செங்கல்லை எடுத்து தந்தையின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமண்பாய், வீட்டின் முற்றத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவத்திற்குப் பிறகு, குடும்பத்தினர் தடயங்களை மறைக்க முயன்றதாகவும், லட்சுமண்பாய் மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறி அவரது உடலை கோண்டல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அவரது தலையில் இருந்த காயங்களைக் கவனித்த மருத்துவர்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து காவல்துறையினரும் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையின்போது தாயும் மகளும் சம்பவம் குறித்த உண்மையை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பூமிகா மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், லட்சுமண்பாயின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ராஜ்கோட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.