மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு நிவாரணம் தரும் சுக்கு அதிமதுர சூப்!

மழைக்காலம் மற்றும் குளிர்ச்சியான சூழலில் பலருக்கும் சளி, இருமல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் தொடர்ந்து மழை பெய்யும் காலங்களில் இத்தகைய தொந்தரவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதுபோன்ற நேரங்களில் உடலுக்கு இதமான சூடான பானமாக சுக்கு, அதிமதுரம் சேர்த்து தயாரிக்கப்படும் சூப்பை பருகலாம்.
செய்முறை:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, அதில் அரை டீஸ்பூன் அதிமதுரப் பொடி, அரை டீஸ்பூன் சுக்குப் பொடி, கால் டீஸ்பூன் திப்பிலிப் பொடி மற்றும் ஆறு பாதாம் பருப்புகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கிச் சேர்க்க வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை மூடி இரண்டு நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். வெந்நீரின் சூட்டில் சேர்க்கப்பட்ட பொருட்கள் நன்கு கலந்ததும், கரைசலை நன்றாகக் கிளறி சூடாக இருக்கும்போதே பருகலாம். இதனுடன் சேர்க்கப்பட்டுள்ள பாதாம் துண்டுகளை மென்று சாப்பிடுவதால் அதிமதுரத்தின் கசப்புச் சுவையும் ஓரளவு குறையும்.
பயன்படுத்தும் முறை:
இந்த சூப் தயாரிக்கத் தேவையான அதிமதுரம், சுக்கு, திப்பிலி உள்ளிட்ட பொருட்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு, பயன்படுத்தும்போது பொடியாகச் சேர்த்துத் தயாரிக்கலாம்.
மழை மற்றும் குளிர்காலங்களில் சூடான பானமாக இதனைப் பருகலாம். இருப்பினும், அதிமதுரத்தைத் தொடர்ந்து அல்லது அதிக அளவில் உட்கொள்வது சிலருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே குழந்தைகள், கர்ப்பிணிகள், ரத்த அழுத்தம் அல்லது சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்த வேண்டாம். சளி, இருமல் நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.




கருத்துகள் (0)