ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
ஆரோக்கியம்

முழுமையாக வேகவைத்த முட்டையா? ஹாஃப் பாயில்டு முட்டையா? எது ஆரோக்கியத்திற்கு நல்லது?

முழுமையாக வேகவைத்த முட்டையா? ஹாஃப் பாயில்டு முட்டையா? எது ஆரோக்கியத்திற்கு நல்லது?

முட்டை என்பது புரதச்சத்து மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சத்தான உணவாகும். குறிப்பாகக் குளிர்காலத்தில் பலரும் தங்களது அன்றாட உணவில் முட்டையைச் சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால் முட்டையை முழுமையாக வேகவைத்துச் சாப்பிடுவது சிறந்ததா அல்லது ஹாஃப் பாயில்டு முறையில் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து உணவியல் நிபுணர் கீதிகா சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.

முழுமையாக வேகவைத்த முட்டையில் வெள்ளைக்கரு, மஞ்சள் கரு என இரண்டுமே நன்றாக வெந்த நிலையில் இருக்கும். இதில் புரதச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் டி, கோலின், செலினியம் மற்றும் கொழுப்புச்சத்துகள் கிடைக்கின்றன. முட்டையை நன்றாக வேகவைக்கும்போது புரதம் உடலால் எளிதில் செரிக்க உதவுவதுடன், சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படும் உணவுத் தொற்று அபாயத்தையும் குறைக்க முடியும்.

குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் முழுமையாக வேகவைத்த முட்டையைச் சாப்பிடுவது பாதுகாப்பான தேர்வாகும்.

மறுபுறம், ஹாஃப் பாயில்டு முட்டையில் வெள்ளைக்கரு ஓரளவு அல்லது முழுமையாக வெந்திருந்தாலும், மஞ்சள் கரு மென்மையாகவும் சில நேரங்களில் முழுமையாக வேகாமலும் இருக்கும். ஊட்டச்சத்து அளவில் முழுமையாக வேகவைத்த முட்டைக்கும் ஹாஃப் பாயில்டு முட்டைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால், முட்டை போதுமான அளவு வேகவைக்கப்படாவிட்டால் சால்மோனெல்லா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட முட்டைகளைப் பயன்படுத்தினால், ஹாஃப் பாயில்டு முறையிலும் சாப்பிடலாம் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டையின் வெள்ளைக்கருவில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. அதேவேளையில், மஞ்சள் கருவில் வைட்டமின் டி, வைட்டமின் பி12, கோலின், இரும்புச்சத்து மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. எனவே, குறிப்பிட்ட மருத்துவக் கட்டுப்பாடுகள் இல்லாதவர்கள் வெள்ளைக்கரு, மஞ்சள் கரு என இரண்டையும் சேர்த்துச் சாப்பிடலாம்.

தினசரி முட்டை சாப்பிடுபவர்கள் உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முழுமையாக வேகவைத்த முட்டையைத் தேர்வு செய்வது நல்லது. முட்டையுடன் காய்கறிகள், முழு தானிய ரொட்டி அல்லது சப்பாத்தி போன்ற உணவுகளையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் சமச்சீரான உணவாக மாற்றிக்கொள்ளலாம்.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.