மாங்காட்டில் பெண்ணைக் கத்தியால் சரமாரியாகக் குத்திய நபர் – காவல் நிலையத்தில் தானாகச் சரண்!

சென்னை புறநகர் பகுதியான மாங்காட்டில் 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கத்தியால் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பத் என்பவர் அந்தப் பெண்ணைக் கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பத், தான் பயன்படுத்திய கத்தியுடன் நேரடியாக மாங்காடு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் திருமணத்தை மீறிய உறவு தொடர்பான பிரச்சினையே இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)