பாகிஸ்தானில் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் வேன்.. குழந்தை உட்பட 11 பேர் பலி!

பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பயணிகள் வேன் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். கிசர் மாவட்டத்தில் உள்ள யாசின் பள்ளத்தாக்கை நோக்கி கில்கிட்டிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது மோர்கா பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலைதடுமாறி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், விபத்தில் காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.




கருத்துகள் (0)