செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
இந்தியா

பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய கொச்சி மருத்துவர் – நடிகை உள்ளிட்ட 12 பேர் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு!

பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய கொச்சி மருத்துவர் – நடிகை உள்ளிட்ட 12 பேர் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு!

 

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஜான்சன் கே. வர்கீஸ் மீது 50 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள நிலையில், கைது நடவடிக்கையைத் தவிர்க்க அவர் எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி இன்ஃபோபார்க் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மருத்துவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நீண்டகாலமாகத் தன்னிடம் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண்ணுடன் நட்பாக மட்டுமே பழகியதாகவும், தன்னைப் பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவர் முன்வைத்துள்ள எதிர்க்குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது மனுவின்படி, கடவந்தரா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அவசர மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி நடிகை அதுல்யா சந்திரன் தன்னை வரவழைத்துள்ளார். அங்கு நடிகையுடன் இருந்த 12 பேர் கொண்ட கும்பல் தன்னைக் கட்டிப்போட்டு தாக்கியதுடன், ஆடைகளைக் களைந்து வீடியோ பதிவு செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.3 கோடி பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்க மறுத்து சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றதால் தன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான வாட்ஸ்அப் உரையாடல் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக நடிகை அதுல்யா சந்திரன் மற்றும் பிபின் பெரும்பள்ளி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் மருத்துவர், கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு கோரி முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஒருபுறம் பாலியல் வன்கொடுமை புகார், மறுபுறம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு என இரு கோணங்களிலும் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்பட்டவை.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.