செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
இந்தியா

போபாலில் ரூ.500 கடன் தர மறுத்த 60 வயது மூதாட்டி கொடூரக் கொலை – நகைகளுடன் செயற்கைப் பற்களையும் திருடிச் சென்ற பெண்!

போபாலில் ரூ.500 கடன் தர மறுத்த 60 வயது மூதாட்டி கொடூரக் கொலை – நகைகளுடன் செயற்கைப் பற்களையும் திருடிச் சென்ற பெண்!

 

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வெறும் ரூ.500 கடன் தர மறுத்ததற்காக 60 வயது மூதாட்டியை அண்டை வீட்டுப் பெண்ணே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபாலின் ஷாஜஹானாபாத் பகுதியில் வசித்து வந்த கல்ரி தேவி என்ற மூதாட்டியிடம், அவரது அண்டை வீட்டில் வசிக்கும் ரேகா (45) என்பவர் ரூ.500 கடனாகக் கேட்டுள்ளார். ஆனால், மூதாட்டி பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ரேகா, அவரைத் தாக்கி மூக்கு மற்றும் வாயைப் பொத்தி மூச்சுத்திணறடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

கொலை செய்த பின்னர், மூதாட்டி அணிந்திருந்த தங்கக் காதணிகள், மூக்குத்தி, கொலுசு மட்டுமின்றி, அவரது வாயில் இருந்த செயற்கை தங்கப் பற்களையும் ரேகா திருடிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி ரேகாவைக் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் செயற்கைப் பற்களும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரேகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மற்றும் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்குகளும் அவர் மீது நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரேகா, இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.