தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இனி முழுமையாக நேரலை! 2 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம்!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள், கேள்வி நேரம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் நேரடியாகப் பார்க்கும் வகையில், முழுமையான நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக தனியார் நிறுவனத்திடம் இருந்து சேவைகளைப் பெறுவதற்கான இரண்டு ஆண்டுகால ஒப்பந்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, 2027 ஜனவரி மாதம் முதல் 2028 டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்றக் கூட்டங்களில் மொத்தம் 160 நாட்கள் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளன. சட்டமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைகளைத் தடையின்றி முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த ஏற்பாட்டின் நோக்கமாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் சட்டமன்றத்தில் என்னென்ன விவாதங்கள் நடைபெறுகின்றன, மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் கேள்விகள் மற்றும் அரசின் பதில்கள் என்ன என்பதையும் பொதுமக்கள் நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.




கருத்துகள் (0)