சென்னையில் யூரி காகரின் சிலை திறப்பு: பள்ளிப் பாடத்திட்டத்தில் விண்வெளி அறிவியலைச் சேர்க்க இஸ்ரோ தலைவர் வலியுறுத்தல்!

சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில், ரஷ்யாவின் முதல் விண்வெளி வீரரான யூரி காகரின் சிலையை இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் மற்றும் ரஷ்ய துணைத் தூதர் வலேரி கோட்சேவ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் விண்வெளி அறிவியல் தொடர்பான பாடங்களைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சியில் ரஷ்யா அளித்துள்ள முக்கியப் பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து, இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்தின் செயல்பாடுகள், விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ மேற்கொண்டு வரும் தற்போதைய முயற்சிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.




கருத்துகள் (0)