தமிழகத்தில் 3வது தடையற்ற சுங்கச்சாவடி தொடக்கம் சென்னை பெங்களூரு பயணம் இனி வேகம்!

நாடு முழுவதும் வாகனங்கள் நின்று சுங்கக் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கும் வகையில் தடையற்ற சுங்கச்சாவடிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மேலும் ஒரு புதிய தடையற்ற சுங்கச்சாவடி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே பரனூர் மற்றும் நெமிலியில் தடையற்ற சுங்க வசதி செயல்பட்டு வரும் நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை 48-ல் கரைப்பேட்டை - வாலாஜாபேட்டை வழித்தடத்தில் உள்ள சென்னசமுத்திரம் சுங்கச்சாவடியும் இந்த வசதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்த 3-வது தடையற்ற சுங்கச்சாவடியாகும்.
இந்த புதிய வசதியால் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல் தொடர்ந்து பயணிக்க முடியும். குறிப்பாக சென்னை - பெங்களூரு இடையே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பயண நேரம் குறையவும், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நெடுஞ்சாலைகளில் தடையற்ற சுங்க வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் பயணத்தை எளிதாக்கவும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.




கருத்துகள் (0)