ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் 9.16 லட்சம் குழந்தைகளுக்கு இலக்கு!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் 9.16 லட்சம் குழந்தைகளுக்கு இலக்கு!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

இந்த முகாமிற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 6,647 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 வயதுக்குட்பட்ட 9.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். ஏற்கெனவே தடுப்பூசி அட்டவணைப்படி போலியோ சொட்டு மருந்து பெற்ற குழந்தைகளும் இன்றைய முகாமில் மீண்டும் சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் இந்த முகாமில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

 

மேலும், முகாம்களில் விடுபடும் குழந்தைகளை கண்டறிந்து சொட்டு மருந்து வழங்குவதற்காக நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் வீடு தேடி செல்லும் குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.