ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

நேபாளத்தை 306 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா ஏ அணி இன்று பாகிஸ்தானுடன் மோதல்!

நேபாளத்தை 306 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா ஏ அணி இன்று பாகிஸ்தானுடன் மோதல்!

ஏசிசி ஆடவர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணி தனது முதல் போட்டியிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நேபாள அணியை எதிர்கொண்ட இந்தியா ஏ, 306 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாகத் தொடங்கியது.

 

முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 332 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா விரைவாக ஆட்டமிழந்தபோதிலும், திலக் வர்மா 107 ரன்களும், குமார் குஷாக்ரா 117 ரன்களும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் சதம் அடித்து இந்தியாவின் வலுவான ஸ்கோருக்கு முக்கிய பங்களிப்பு அளித்தனர்.

 

பின்னர் 333 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாள அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 26 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்திய தரப்பில் பிரின்ஸ் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி நேபாள அணியின் பேட்டிங்கை முடக்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குமார் குஷாக்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தியா ஏ அணி இன்று நவம்பர் 22ஆம் தேதி பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் செயலி மூலம் ரசிகர்கள் நேரலையில் காணலாம்.

 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. ஆயுஷ் படோனி, திலக் வர்மா, குமார் குஷாக்ரா, ரிங்கு சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ் ஆகியோர் பேட்டிங் வரிசையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், ஷாபாஸ் அகமது மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோர் அணியில் இடம்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு எதிரான பெரிய வெற்றியின் நம்பிக்கையுடன் இந்தியா ஏ அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.