தூத்துக்குடியில் 11ஆம் வகுப்பு மாணவி கொலை காதலன் தற்கொலை முயற்சி!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே செபத்தையாபுரம் பகுதியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த அபர்ணா என்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜா என்ற இளைஞர் மாணவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவரும் தற்கொலைக்கு முயன்று காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அபர்ணாவுக்கும் முத்துராஜாவுக்கும் இடையே காதல் இருந்ததாகவும், இந்த விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மாணவியின் படிப்பு முடிந்த பிறகு திருமணம் குறித்து பேசலாம் என இரு வீட்டாரும் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அபர்ணா வேறு ஒருவருடன் பேசுவதாக முத்துராஜா சந்தேகமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நவம்பர் 21ஆம் தேதி மதியம் மாணவியின் வீட்டிற்குச் சென்ற அவர், அங்கு யாரும் இல்லாத நேரத்தில் அபர்ணாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் மாணவியைக் கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, முத்துராஜாவும் கூர்மையான ஆயுதத்தால் தன்னை காயப்படுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் காயமடைந்த முத்துராஜாவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாயர்புரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)