தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை திட்டம்.. 1.24 லட்சம் பெண்களுக்கு பயன்!

தமிழகத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கும் நோக்கில், HPV-DNA பரிசோதனை திட்டத்தை 5 மாவட்டங்களில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு புற்றுநோய் பராமரிப்பு திட்டத்தின் கீழ் இந்த புதிய பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 35 வயதுடைய 1,24,215 பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டு வந்த முறைகளைவிட, HPV-DNA பரிசோதனை அதிக துல்லியத்துடன் நோய் அபாயத்தை கண்டறிய உதவும். மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக இருப்பதால், இந்த பரிசோதனை மூலம் ஆபத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையை வழங்க முடியும்.
உலக சுகாதார அமைப்பும் அதிக செயல்திறன் கொண்ட HPV-DNA பரிசோதனையை முதன்மை பரிசோதனை முறையாக பரிந்துரைக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் தொடங்கப்படும் இந்த திட்டம், தொடர்ந்து படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பெண்களிடம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உயிரிழப்புகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.




கருத்துகள் (0)