வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
இந்தியா

வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழ்... APK கோப்பை டவுன்லோட் செய்ததும் காலியான வங்கிக் கணக்கு! ரூ.10 லட்சத்தை இழந்த நபர் – சிக்கிய மோசடி கும்பலைச் சேர்ந்தவர்!

வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழ்... APK கோப்பை டவுன்லோட் செய்ததும் காலியான வங்கிக் கணக்கு! ரூ.10 லட்சத்தை இழந்த நபர் – சிக்கிய மோசடி கும்பலைச் சேர்ந்தவர்!


வாட்ஸ்அப்பில் வரும் திருமண அழைப்பிதழைக் கூட இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில், திருமண அழைப்பிதழ் என்ற பெயரில் அனுப்பப்பட்ட APK கோப்பைப் பதிவிறக்கம் செய்த நபர், தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.10.02 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் இந்த அதிர்ச்சி அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு திருமண அழைப்பிதழ் ஒன்று வந்துள்ளது. அதனை உண்மையான அழைப்பிதழ் என நம்பிய அவர், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 'wedding invitation.APK' என்ற கோப்பைப் பதிவிறக்கம் செய்துள்ளார்.

ஆனால், அந்தக் கோப்பை டவுன்லோட் செய்த சிறிது நேரத்திலேயே அவரது செல்போன் சைபர் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், அவரது வங்கிக் கணக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைத் திருடியுள்ளனர். இறுதியில் மொத்தம் ரூ.10.02 லட்சத்தை இழந்துள்ளார்.

வங்கிக் கணக்கை மோசடிக்கு பயன்படுத்திய நபர் கைது!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் சூரத் சைபர் கிரைம் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, இந்த மோசடியில் தொடர்புடையதாக உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூரைச் சேர்ந்த 28 வயதான தேவேந்திர மாலிக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சைபர் குற்றவாளிகளுக்கு தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதி அளித்து, மோசடியாகப் பெறப்பட்ட பணத்தைப் பரிமாற்றம் செய்ய உதவியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மோசடிப் பணத்தில் 20 சதவீதத்தைத் தனக்கான கமிஷனாக வைத்துக்கொண்டு, எஞ்சிய தொகையை தனது கூட்டாளிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு போலீசார் எச்சரிக்கை!

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் APK கோப்புகளைத் திறக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, திருமண அழைப்பிதழ், புகைப்படம் அல்லது வேறு ஏதேனும் பெயரில் அனுப்பப்படும் சந்தேகத்திற்குரிய கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒருவேளை இதுபோன்ற ஆன்லைன் பண மோசடியில் சிக்கி பணத்தை இழந்துவிட்டால், தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு சாதாரண திருமண அழைப்பிதழ் என நினைத்து APK கோப்பைப் பதிவிறக்கம் செய்ததற்காக ரூ.10 லட்சத்திற்கும் மேல் இழந்த சம்பவம், செல்போன் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.