13 நாட்களில் ரூ.1.30 குறைந்த முட்டை விலை தினசரி நிர்ணயம் நிறுத்தம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், தினசரி விலை நிர்ணயம் செய்யும் நடைமுறையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையே வரும் நவம்பர் 28ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 7ஆம் தேதி ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.6.70 ஆக இருந்தது. அதன் பிறகு விற்பனை மற்றும் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் படிப்படியாக விலை குறைக்கப்பட்டு, தற்போது ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 நாட்களில் மட்டும் முட்டையின் விலை ரூ.1.30 சரிந்துள்ளது.
தொடர்ச்சியாக விலை குறைந்து வருவதால் கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நாமக்கல் மண்டலத்தில் தினசரி விலை மாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி, தற்போதைய கொள்முதல் விலையை நவம்பர் 28ஆம் தேதி வரை நீடிக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.




கருத்துகள் (0)