70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் முதியவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரம்பின்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில், முதல்வரின் முதியோர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 38 லட்சம் முதியவர்கள் பயன்பெற உள்ளனர்.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தில், 70 வயதை எட்டிய அனைவருக்கும் வருமான உச்சவரம்பு இல்லாமல் மருத்துவக் காப்பீட்டு வசதி கிடைக்கும். இதனால் முதியவர்கள் தங்களது மருத்துவத் தேவைகளுக்காக அதிக அளவில் பணம் செலவிட வேண்டிய நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காப்பீட்டின் மூலம் புற்றுநோய் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உயர் மருத்துவ சேவைகளைப் பெற முடியும். மேலும், உயர்தர மருத்துவப் பரிசோதனைகளும் காப்பீட்டின் கீழ் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களும், அந்தத் திட்டத்தில் சேராத முதியவர்களும் இந்த புதிய காப்பீட்டில் இணைக்கப்பட உள்ளனர். பயனாளிகள் சேர்க்கை இ-சேவை மையங்கள் மற்றும் காப்பீட்டுப் பதிவு மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். முதுமையில் ஏற்படும் நோய்களுக்கும், அதிக செலவு பிடிக்கும் சிகிச்சைகளுக்கும் நிதிச்சுமை இல்லாமல் மருத்துவ உதவி கிடைக்க இந்தத் திட்டம் முக்கிய ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)