செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
சினிமா

61 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் 'திருவிளையாடல்'! நவம்பர் 27-ல் ரீ-ரிலீஸ்!

61 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் 'திருவிளையாடல்'! நவம்பர் 27-ல் ரீ-ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத படைப்புகளில் ஒன்றான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'திருவிளையாடல்' திரைப்படம், 61 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளுக்கு வரவுள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, நாகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் வெற்றிப் படமாகவும் அமைந்தது.

 

சிவபெருமானின் திருவிளையாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், ஆன்மிகம், கலை மற்றும் சிறந்த நடிப்பின் மூலம் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது. குறிப்பாக, சிவாஜி கணேசனின் நடிப்பும், நாகேஷின் நகைச்சுவைக் காட்சிகளும் படத்தின் தனிச்சிறப்பாகப் பார்க்கப்படுகின்றன.

 

இந்நிலையில், பழமையான திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுப்பித்து மீண்டும் வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து வரும் நவம்பர் 27-ம் தேதி 'திருவிளையாடல்' திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.

 

பல ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் இப்படத்தை ரசித்த ரசிகர்களுக்கும், தற்போதைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கும் இந்த மறுவெளியீடு ஒரு சிறப்பான அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 61 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் சிவாஜியின் நடிப்பைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.