வடிவேலு சாயல் காரணமாக வாய்ப்புகளை இழந்த நடிகர் முத்துராஜா 34 வயதில் உயிரிழந்த சோகம்!

‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம்பெற்ற ‘வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடலில் கானா உலகநாதனுக்கு மைக் பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் நடிகர் முத்துராஜா. ‘களவாணி’ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், திரையுலகில் தனக்கான பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் முன்பே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது வாழ்க்கைப் போராட்டங்களையும் மரணத்தையும் நடிகர் காதல் சுகுமார் நினைவுகூர்ந்துள்ளார்.
2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த முத்துராஜா, நடிகர் சூரி உள்ளிட்டோருடன் சுமார் 15 ஆண்டுகள் போராடியதாக கூறப்படுகிறது. அவரது தோற்றம் நடிகர் வடிவேலுவை நினைவுபடுத்தியதால், வாய்ப்புகள் தேடுவதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக காதல் சுகுமார் தெரிவித்துள்ளார். ஏவிஎம் ஸ்டுடியோவில் வாய்ப்பு கேட்க சென்றபோது, முத்துராஜாவை வெளியே அனுப்பினால்தான் படப்பிடிப்பில் நடிப்பேன் என வடிவேலு கூறியதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பல தடைகளை கடந்து ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் வசனமில்லாத கதாபாத்திரத்தில் நடித்த முத்துராஜாவுக்கு, அதன் பிறகு தொடர்ந்து 10 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் திருமுருகனின் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் கிடைத்ததால், அவரது திரைப்பயணம் ஓரளவு முன்னேற்றம் கண்டது.
34 வயதில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கிய முத்துராஜா, திருமணமான ஒரு மாதத்திலேயே துயரமான சம்பவத்தை சந்தித்தார். வீட்டின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பம்ப் காரணமாக உடலில் காயம் ஏற்பட்டதாகவும், ஆரம்பத்தில் அதை கவனிக்காமல் விட்டதால் காயத்தில் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி சில வாரங்களிலேயே அவர் உயிரிழந்தார். அவரது நினைவு நாளில் காதல் சுகுமார் பகிர்ந்த இந்த சம்பவங்கள் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)