ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஈரோடு பனைவெல்லத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு – ஐரோப்பிய சந்தையை அடைந்த தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்!

ஈரோடு பனைவெல்லத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு – ஐரோப்பிய சந்தையை அடைந்த தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்!

தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பொருட்களில் ஒன்றான பனைவெல்லம், தற்போது சர்வதேச சந்தையிலும் கவனம் பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் இயற்கை பனைவெல்லம் முதன்முறையாக ஐரோப்பிய நாடான பல்கேரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தனது 140-வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இதுகுறித்துப் பேசினார். குளிர்காலத்தில் வெல்லத்தின் பயன்பாடு அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பல நூற்றாண்டுகளாக இந்திய மக்களின் உணவுப் பழக்கத்தில் இடம்பெற்றுள்ள வெல்லம் தற்போது உலகச் சந்தைகளையும் சென்றடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திலிருந்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பனைவெல்லம் ஐரோப்பாவைச் சென்றடைந்திருப்பது பாரம்பரிய உணவுப் பொருட்களின் தரத்தையும் பெருமையையும் வெளிப்படுத்துவதாக அவர் பாராட்டினார்.

கோபியிலிருந்து பல்கேரியாவுக்கு ஏற்றுமதி

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திலிருந்து கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி 1.755 மெட்ரிக் டன் இயற்கை பனைவெல்லப் பொடி பல்கேரியாவின் வர்ணா நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஏற்றுமதி நடவடிக்கைக்கு மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான APEDA உதவியுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த வெல்பீயிங் ஃபுட்ஸ் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த செட்டி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பொருளைத் தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் இயற்கை வேளாண் தரச் சான்றிதழ்களுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இயற்கை வேளாண் தரச் சான்றிதழையும் இந்தப் பொருள் பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு

பனை மரத்தின் பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பனைவெல்லம், தமிழகத்தின் பாரம்பரிய இனிப்புப் பொருட்களில் முக்கியமானதாகும். தற்போது இது பொடி வடிவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது, பாரம்பரியப் பொருட்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த ஏற்றுமதி முயற்சி மூலம் பனை விவசாயிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய உற்பத்திப் பொருட்கள் சர்வதேச சந்தையை நோக்கி முன்னேறி வரும் நிலையில், ஈரோடு பனைவெல்லத்தை பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுப் பாராட்டியது விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.