சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
அரசியல்

கைதான தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் டிசம்பர் 11 வரை கடலூர் சிறையில் அடைப்பு!

கைதான தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் டிசம்பர் 11 வரை கடலூர் சிறையில் அடைப்பு!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், டிசம்பர் 11-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று அதிகாலை அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், அருள் விக்னேஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டு, பல்வேறு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

 

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை அருள் விக்னேஷின் வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரைக் கைது செய்து, தியாகதுருகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. பின்னர் மருத்துவப் பரிசோதனை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

அவரை டிசம்பர் 11-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் அழைத்துச் செல்லப்பட்ட அருள் விக்னேஷ், இன்று அதிகாலை 4.05 மணிக்கு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.