குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த முன்னாள் ஊர்க்காவல் படை வீரர்! தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத் தலைமையகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில், 43 வயதான மகபூப் பீ என்ற பெண் அவரது கணவர் சதீஷால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பின்னர், கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டை தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த சதீஷ் தனது மனைவியின் கழுத்தை முறுக்கி, அவரது தலையைத் தரையில் பலமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மகபூப் பீ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். சதீஷ் ஏற்கெனவே ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் மற்றும் சதீஷின் மதுப்பழக்கம் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நல்கொண்டா டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்த மகபூப் பீயின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரது கணவர் சதீஷைக் கைது செய்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)