வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

தலித் நபரின் தோளில் அமர்ந்து ஆற்றைக் கடந்த எம்.எல்.ஏ.! வழுக்கி விழுந்ததால் சர்ச்சை – வைரலாகும் வீடியோ!

தலித் நபரின் தோளில் அமர்ந்து ஆற்றைக் கடந்த எம்.எல்.ஏ.! வழுக்கி விழுந்ததால் சர்ச்சை – வைரலாகும் வீடியோ!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஆற்றைக் கடப்பதற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் தோளில் அமர்ந்தபடி சென்ற ஆர்.ஜே.டி சட்டமன்ற உறுப்பினர் நரேஷ் பிரசாத் சிங், இருவரும் ஆற்றுக்குள் தவறி விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

பலாமு மாவட்டத்தின் விஷ்ராம்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான நரேஷ் பிரசாத் சிங், காசிதாக் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுள்ளார். அப்போது வழியில் இருந்த துரியா ஆற்றைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் முழங்கால் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் நடந்துசெல்லாமல் மனோஜ் ரவிதாஸ் என்ற உள்ளூர் நபரின் தோளில் அமர்ந்து ஆற்றைக் கடக்க முயன்றுள்ளார்.

 

ஆற்றின் நடுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எம்.எல்.ஏ.வைச் சுமந்து சென்ற மனோஜ் ரவிதாஸ் கல்லில் வழுக்கி நிலைதடுமாறியுள்ளார். இதனால் இருவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். தண்ணீரின் அளவு குறைவாக இருந்ததால் பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.எல்.ஏ. ஆற்றில் விழுந்த பிறகு மற்றொருவர் அவரது காலணிகளை எடுத்துச் செல்லும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

 

இந்தச் சம்பவத்துக்கு உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் அஞ்சு தேவி கண்டனம் தெரிவித்துள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த நபரின் தோளில் அமர்ந்து ஆற்றைக் கடந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்ற கிராம மக்களின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்படாததே இத்தகைய நிலைக்குக் காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

 

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவின் ஒரு பகுதி மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டு, அரசியல் ஆதாயத்திற்காகத் தவறான முறையில் சித்தரிக்கப்படுவதாக எம்.எல்.ஏ நரேஷ் பிரசாத் சிங் விளக்கமளித்துள்ளார். இதனால் இந்தச் சம்பவம் ஜார்க்கண்ட் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

https://twitter.com/ndtvindia/status/2120499307526881643/video/1 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.